இசைப்பிரியா, (கசங்கிய அனிச்சம்)

இசைப்பிரியா, (கசங்கிய அனிச்சம்)

விடுதலை வேட்கைக்கு
“குர”ல் தந்த…
தமிழீழ ஊடகத்தின்
தாமரை முகமே!

ஈழ கொள்கையை
எத்திக்கும்
ஏந்தி பயணித்த
ஏழிசை அகமே!!

உன்….
உடல் தின்று
உயிர் கொன்ற
பகையை  நான் என்னச் செய்ய?

அந்த…
அரக்க குல
வன்முறை போரின்(?!)
வகையை  நான் எங்குச் சொல்ல?

சில… கார்த்திகை பூக்களும்
என்… கண்ணீர் துளிகளும்
உன் காலடிக்கு காணிக்கை.


(இசைப்பிரியா ஊடகத்துறையில் பணியாற்றி வந்த ஒரு இசைக்கலை, நடனக்கலையை நன்கு பயின்ற சாதாரண பெண்மணி, அவரை மிகவும் கேவலமான முறையில் படையினர் சித்திரவதை செய்தமை மன்னிக்க முடியாததொரு போர்க்குற்றமாகும், இலங்கை படையினரின் வன்முறைகளை உலக நாடுகளுக்கு காண்பித்து அம்பலப்படுத்த வேண்டும்.)

தீர்வென்றத் தினவு

எம்...
காவல் தெய்வங்கள்
கேள்விக் குறி.

இன்று...
ஆட்டு மந்தைக்கோ!
காவல் நரி!

இனம் வாழும் வரை
உணர்விருக்கும்!_ அதில்
ஈழமே... தீர்வென்ற
தினவிருக்கும்!!

 

அன்பானவர்களே!!!!
இது ஈழம் மட்டுமே உள்ளடக்கிய ஓர் ஆவணம்.
என் படைப்பை தயவு செய்து  உங்களின் தளத்தில் மறுப்பதிவு செய்யாதிங்க.
 இது என் உணர்வு இதை நான் பத்தகமாக்கும் எண்ணம் உள்ளது. 
நாளை குழப்பம் வராமல் இருக்க தயவு செய்து  மறுப்பதிவு செய்யாதிங்க.
இதுவரை அப்படி செய்தவர்கள் அதனை நீக்கிவிடவும்.
 அன்புடன்...
  நான் சித்தன்.

பிரபாகரன் , சித்தனின் 100 வது ஈழக்கவிதை

பிரபாகரன்
என்னும் உன் பெயர்தான்
இந்த நூற்றாண்டின்
ஆண்மையின் அடையாளம்.

கால்நூற்றாண்டு நிர்வாகம் – உன்
கைகளில் இருந்திருந்தால்
இரண்டு மூன்று ஜப்பானை
ஈழம் கண்டிருக்கும்.

உன் தமிழீழ தாகத்தை
உலகம் உணர்ந்திருந்தால்
அங்கே,
தமிழச்சிகள்
கற்போடு வாழ்ந்து சாகும்
கனவுப் பலித்திருக்கும்.

விதியின் நேர்கோடேனும்
விலகாது இருந்திருந்தால்
ஈழத்தின் உற்பத்தியை
இவ்வுலகம் புசித்திருக்கும்.

தன்மானத்தின் கம்பீரமே!

இன்று,
வந்துவிடாதெ
மாவீரர் உரையாற்ற

நாளை,
வந்துவிடு
காடையர்க்கு பாலுற்ற.

(தேசிய தலைவருக்கு (26- 11- 2009) எமது 55 தாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்)

அன்பானவர்களே!!!!

இது ஈழம் மட்டுமே உள்ளடக்கிய ஓர் ஆவணம்.
என் படைப்பை தயவு செய்து  உங்களின் தளத்தில் மறுப்பதிவு செய்யாதிங்க. இது என் உணர்வு இதை நான் பத்தகமாக்கும் எண்ணம் உள்ளது. நாளை குழப்பம் வராமல் இருக்க தயவு செய்து  மறுப்பதிவு செய்யாதிங்க.இதுவரை அப்படி செய்தவர்கள் அதனை நீக்கிவிடவும்.

 அன்புடன்,
  நான் சித்தன்.

 குண்டு செய்!

குண்டு செய்!

இன விடுதலைக்கெதிராய்
போராயுதங்கள் தந்த
புண்ணியவான்களே!

போர்முடிந்தது -அங்கே
பொழுது விடிந்ததா?

மண்ணையுண்டு காற்றைவிழுங்கி
மனிதன் வாழ வழியுண்டா?
எங்கள் துயரை எடுத்துரைக்க
எங்கேனும் மொழியுண்டா?

முள்வேலி நரகத்தில்
மூச்சு திணருது,
மூன்று லட்ச உயிர்களென
எந்த நாடு உணருது!!

ஓ…நாட்டாமை நாடுகளே!
இருக்கும் உயிரை…
காப்பாற்ற தொண்டுச்செய்!
இல்லயேல்…
எல்லா உயிருக்குமென
ஒரே ஒரு “குண்டுச் செய்”!

மரணக்குழிகள் 1346

மரணக்குழிகள் 1346

மகிந்தாவின் கூட்டுப்படை
மண்ணில் ஆயிரமாயிரம்
மரணக்குழிகளை வெட்டியதாம்,
அங்கே அடர்த்தியாய்
வாழ்ந்த தமிழினத்தை
வன்முறையால் வதைத்ததாம்!
பின்,
கொன்றும் கொல்லாமலும்
குழிக்குள் தள்ளிப் புதைத்ததாம்!!

இதை,
தொழிற்நுட்பம்
நிழற்ப்படமாய் சாட்சிச் சொல்லுது!
அதை இலங்கையின்
அரசினபேடிகள் மறைத்துச் செல்லுது!!

அப்”பாவிகள்” கொன்றது
அப்பாவிகளை என்ற
உண்மை ஒருநாள் வெளியாகும்!
அடே மகிந்தா
அன்றே உன் தலை தனியாகும்!!

மகிந்தா உன் வெற்றியை
நாளைய…
வரலாறு பழித்துச் சொல்லும்!
அன்று,
எம் மாவீரர் எண்ணம் தான்
அந்த…மண்ணில் வெல்லும்.

 

 (இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான கால கட்டத்தில், 7000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் அதை விட மிகப் பெரிய அளவில், பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளை இலங்கைப் படைகள் கொன்று குவித்துள்ளதாக ஆம்னஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

இந்த நிலையில், வன்னிப் போர்ப் பகுதியில் மிகப் பெரிய அளவில் உள்ள சவக்குழிகளின் சாட்டிலைட் படங்களை ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. மொத்தம் மூன்று பெரிய சவக்குழிகள் இதில் காணப்படுகின்றன. ஆனால் மொத்தம் 1346 சவக்குழிகள் இருப்பதாக ஆம்னஸ்டி தெரிவித்துள்ளது.)

தருணங்கள்...

தருணங்கள்...

ஒரே தெருவில் வாழ்ந்த எங்களை
உலகெல்லாம்…
இறைத்து வைத்திருக்கிறது,
காலம்!.

எங்களின்,
சிறுவயது வாழ்க்கை…
சிரித்தப்படி… கதைத்தப்படி
அமையாது போக,
அப்பா, அம்மாவின்
கைவிரல் பிடித்து
கரையேறிவிட்டோம்…
ஏதும் அறியாது!

இன்று,
கைக்கு எட்டிவிட்ட
எந்த பிரமாண்டங்களிலும்
மனம் ஒப்ப மறுக்கிறது!

எங்கள் மண்ணில்
எங்களின் விடுதலைக் காற்றை
நுரையீரல் முழுதும் நிரப்பி
நுகரதான்… ஏங்குகிறது!

எங்கள்,
சிறுவயதுக்கு விலங்கிட்டு
உரிமை மறுத்த
அதே மண்ணில்,
எம் பிள்ளைகள் ஒன்றாய்
சிரித்தபடியும்…
கதைத்தபடியும்
செல்லுமந்த
செம்மார்ந்த தருணங்களை
என்வீட்டின் திண்ணையிலிருந்து
இறுமார்ந்து காண வேணும்
இதற்கான அமைவு வேணும்.

(அன்பானவர்களே!
கடந்த சில மாதங்களாக இந்த வலைதளத்தில் எழுதிவருகிறேன். இதற்கான “படங்களை”செய்தி பக்கத்தில் இருந்தும் சிலருடைய வலைப்பக்கத்திலிருந்தும் எடுத்தாண்டேன்.அதற்காக அவர்களுக்கு எம் மனமார்ந்த நன்றிகள்.
      என் படைப்பை சிலர் தங்களின் வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளீர்கள்… ஆனால் அந்த படைப்பில் எனது பெயரோ… எனது வலைப்பக்கத்தின் பெயரோ குறிப்பிடபடவில்லை. இது படிப்போரிடம் ஓர் குழப்பத்தை   (யார் எழுதினார்கள் என்ற ) ஏற்படுத்துகிறது. ஆகையால் இனி எனது படைப்பை தங்களின் வலையில் பதிவேற்றம் செய்தால் கண்டிப்பாக எனது பெயரையோ அல்லது எனது வலைப்பதிவின் பெயரையோ கண்டிப்பாக குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி!
                                              அன்புடன்…நான்…சித்தன்.)

தோற்ற பிழை

தோற்ற பிழை

 

ஈழ புரட்சி…
தோற்றதேயில்லை
எதிரிகளிடம்.!
இதோ,
தோற்று நிற்கிறது
துரோகத்திடம்.

இன்றைய நிலை ஓர்
“தோற்றப் பிழை”
எமக்கு போதுமானது
நம்பிக்கை என்ற
ஒற்றை இழை

சீருடையின்
சீற்றமும்
ஆயுதங்களின்
ஆர்பரிப்பு மட்டுமே
புரட்சியின் அடையாளமல்ல!

எதுவும் இல்லா நிலையிலிருந்து
எதையும் வெல்வதே புரட்சி!
அந்த நம்பிக்கையே…
நாளைய எழுட்சி.

சிறகிருக்கு...வானமில்லை!

சிறகிருக்கு...வானமில்லை!

சிறகிருக்கு…
வானமில்லை._ இதை
சிந்திக்க எவருக்கும்
ஞானமில்லை!

உயிரிருக்கு…
உறவில்லை._ இதை
உணரதான்
உலகில்லை!

பசியிருக்கு…
கஞ்சியில்ல…_ இந்த
பவத்த…
எங்கு சொல்ல!

சின்னக் கூடாரமே
எல்லையாட்சு._இங்கே
சிங்கள முள்வேலி
தொல்லையாட்சு!

சிறகிருக்கு…
வானமில்லை._இதை
சிந்திக்க எவருக்கும்
ஞானமில்லை!!

    ( மூச்சு விட அனுமதிக்கும் … முள்வேலிக்குள்… நம்முறவு.)

காக்கும் கடவுள்

காக்கும் கடவுள்

காக்கும் வேலியவே…
தாக்கும் விலங்குகளுக்கு,
வேலியின் சிதைவோ…
விருந்தாகி போனது.

எங்களின்…
கட்டிலில் கால் நீட்டி,
வீச சொல்கிறது
வெண்சாமரத்தை.

விலங்குகளே- எச்சரிக்கை

காவல் கடவுள்
மீண்டும் வரும்- எமது
விடுதலை பூமியை
வென்றுத் தரும்.

அன்று,
புதிதாய் உருவாகும்
எமது நாடு!

அதுவரை,
போகட்டும் அகதியாய்
எம்முயிர் கூடு!!
     
      (தனக்கான பாதுகாப்பு வேலி சிதைந்தப்பின்…அடிமையாய் வாழ உடன்படாது… அகதியாகும் எம் உறவுகளின், நம்பிக்கையும் ஏக்கமும் இது.)

"1983"

"1983"

எம்,
மதில் சுவரைத்
தகர்த்த மமதையில்…
உள் நுழையும் நாய்கள்,
சோற்றுப் பானையில்
வாய் விட்டு அலசுகிறது.

விரட்டினாலோ…
…வெறிக்கொண்டு பாய்ந்துவிடுகிறது!
எம் உடலெங்கும்_ தன்
நகக்கீறலை பதிந்துவிடுகிறது!!.

   (ஊடகத்தின் கண்ணில் கருப்புத்துணியை கட்டி… கொண்டாட்டம் என்ற பெயரில் அரசே அரங்கேற்றும் வன்முறையும் துன்பியல்களும் கடந்த “1983“ஐ நினைவுப்படுத்துகிறது.)

Blog Stats

  • 17,954 hits